அறிவியல் தகவல்கள்(science informations)
பயன் உள்ள தகவல்கள் அனைத்தும் இங்கு உண்டு.
dvdfv
Sunday, December 16, 2012
சாதனைக்கு எதுவும் தடையில்லை
சாதனைக்கு எதுவும் தடையி
ல்லை
“எனக்கு மட்டும் யாராவது உதவி செய்திருந்தால் பெரிய அளவுக்கு வாழ்வில் முன்னேறியிருப்பேன். எனக்கு மட்டும் உடம்பில் போதிய பலம் இருந்திருந்தால் பெரிய விளையாட்டு வீரனாக வந்திருப்பேன். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல், குழந்தைகள் என்னை நம்பி இல்லாமல் இருந்திருந்தால் தைரியமாக ரிஸ்க் எடுத்து பல சாதனைகள் செய்திருப்பேன்” என்று பலர் வாய்ச்சவடாலாக பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.
சாதனை செய்ய நினைப்பவர்களுக்கு தடையாக எதுவுமே இருக்க முடியாது என்பது தான் உண்மை. ஏனென்றால், தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுபவன் தான் சாதனையாளன். இதற்கு மிகச் சரியான உதாரணம் சே குவேரா.
1928ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள ‘ரொசாரியோ’ எனும் இடத்தில் குறைமாதக் குழந்தைகயாகப் பிறந்தார் சே குவேரா. இன்று போல் குறைமாதக் குழந்தைகளுக்கான மருத்துவம் அன்று இல்லை. இதனால் பச்சைக் குழந்தையாக இருந்தபோதே மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டார்.
எப்போதும் இருமிக்கொண்டே இருந்ததால், அவரை பள்ளியில் சேர்க்க மறுத்தனர். அதனால் அவருடைய அம்மா, வீட்டிலேயே பாடங்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். ஓரளவு வளர்ந்த பின்னரே பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
உடல் நலம் சரியில்லை என்றாலும், உடல் வலிமையைக் காட்டும்படியான சைக்கிளை வேகமாக ஓட்டுவது, கால் பந்தாட்டம் ஆடுவது, ரக்பி போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார் சே குவேரா.
இந்த விளையாட்டுக்கள் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் விளையாட்டை நிறுத்தமாட்டார். சுவாசத்தைச் சரிசெய்யும் இன்ஹேலரை எப்போதும் உடன் வைத்திருந்து, உறிஞ்சிய பின் மீண்டும் விளையாடத் தொடங்கிவிடுவார்.
அதிகம் வெளியே அலையக்கூடாது என்ற கட்டுப்பாட்டினை தளர்த்த எண்ணினார். மருத்துவம் படித்துக்கொண்டிருந்த சே, உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே 1950ம் ஆண்டு இலத்தீன் அமெரிக்காவின் 12 மாநிலங்கள் முழுவதும் சைக்கிளிலேயே சுற்றிவந்தார். அந்தப் பயணம் தான் சே குவேராவின் உலகப் பார்வையை மாற்றியது.
வறுமையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களைக் கண்டு மனம் வருந்தினார். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். சுதந்திரம் என்பது ஒவ்வொருவரது உயிர் மூச்சாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காண முடியும் என்று நம்பினார். அதனாலேயே அமெரிக்காவின் பிடியிலிருந்த கியூபா விடுதலைக்காகப் போராடிய காஸ்ட்ரோவின் சுதந்திர தாகத்துக்கு தோள் கொடுக்கத் தொடங்கினார்.
காஸ்டரோ ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் சே குவேராவின் படை போராட்டத்தைத் தொடங்கியது. 148 வீரர்களுடன் 46 நாட்கள் உணவு, தண்ணீர், உறக்கம் இன்றி, பசி, கொசுக்கடி, புயல், வெள்ளம், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு சுமார் 300 கி.மீட்டர் தூரத்தைக் கடந்தார்.
கொரில்லாப் படையாக உருமாறி எதிரிகளை பந்தாடியது மட்டுமின்றி எதிர்பட்ட விவசாயிகளிடம் ஆதரவு திரட்டி மக்கள் நாயகனாகவும் மாறினார். இந்தப் பயணத்தின் போது சே குவேரா மருந்துகள் இல்லாமல் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
பல்வேறு நாடுகளுக்கு மாறுவேடம் புனைந்து சென்று ஆதரவு திரட்டி, சிறைபட்டு, போரிட்டு, 1959ம் ஆண்டு கியூபாவுக்கு சுதந்திரம் கிடைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திர கியூபாவில் அவருக்கு பல்வேறு பதவிகள் கிடைத்தது என்றாலும், சே குவேராவின் பார்வை வேறு மாதிரி இருந்தது.
ஆம், கியூபாவுக்கு மட்டும் சுதந்திரம் கிடைத்தால் போதாது, ஒவ்வொரு நாடும் சுதந்திர நாடாகவே இருக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக கியூபா கொடுத்த உயர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு காங்கோ மற்றும் பொலிவியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார்.
கடும் சண்டையின் போது கைது செய்யப்பட்டு ‘லா கிகுவேரா’ எனும் இடத்தில் கழுத்திலும், நெஞ்சிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மரணத்தின் கடைசி தருணங்களில் நின்றபோதும் தன்னைக் கொல்ல வந்தவர்களைப் பார்த்து ‘ஒரு நிமிடம் பொறு; நான் எழுந்து நிற்கிறேன்; பிறகு என்னைச் சுடு’ என்று காலில் குண்டு பாய்ந்திருந்த நிலையிலும் எழுந்து நின்ற வீரம் சேவுடையது.
குறைமாத குழந்தைகயாக நோயுடன் பிறந்தவர். ஒரு சுற்றுலாப் பயணியாக வாழ்வைத் தொடங்கி, மாபெரும் படிப்பாளியாகி, எழுத்தளானாக உருமாறி, நல்ல காதலனாக இருந்து, சிறந்த கணவனாகி, அப்பாவாகி, இறுதியில் புரட்சியாளனாக உயர்ந்தவர்.
இவற்றையெல்லாம் 39 வருட வாழ்விலேயே செய்து முடித்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட ஒருவரால் உலகின் தலையெழுத்தையே மாற்ற முடிந்தது எனும்போது, எந்தவித தடையும் இல்லாத நாம், கண்ணுக்குத் தெரியாதவற்றை எல்லாம் தடையாக நினைத்து புலம்பலாமா?
சாதனை செய்வதற்கு எதுவுமே தடையில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். களத்தில் இறங்குங்கள். வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment